மார்க்கண்டேயனை காத்த காலந்தக மூர்த்தி அவதாரம்
சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புகளும் புராணங்களும் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவன் இப் பிரபஞ்சத்திற்கு காத்து அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், காலந்தக மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ் காலந்தக மூர்த்தி வடிவமானது காலனைக் கொன்ற திருக்கோலமாகும்.
பெயர் : காலந்தக மூர்த்தி
வாகனம் : லிங்க மேனி
மூர்த்த வகை : மகேசுவர மூர்த்தம்
காலந்தக மூர்த்தி அவதார காரணம்
மிருகண்டு முனிவர் என்பவர் மருத்துவதி என்னும் பெண்ணைத் திருமணம் செய்தார். ஆண்டுகள் பலவாகியும் குழந்தையில்லாத காரணத்தால் மிருகண்டு காசி சென்று குழந்தை வேண்டி தவமியற்றத் தொடங்கினார்.அவரது தவத்திற்கு மெச்சி சிவபெருமான் காட்சிக் கொடுத்து என்ன வேண்டும் என்று கேட்டார்.
குழந்தை வேண்டுமென்றதும் தீயகுணம், உடல் நோய், ஐம்பொறி ஊனம், அறிவின்மை ஆகியவற்றுடன் நூறாண்டு வாழும் பிள்ளையா அல்லது அழகு, அறிவு, நோயின்மை, எம்மருள் கொண்ட பதினாறு வயது வரை ஆயுள் கொண்ட பிள்ளையா என்று கேட்டார்.முனிவர் பதினாறு வயது வரை ஆயுள் கொண்ட பிள்ளையே வேண்டுமென்றார்.
உடன் சிவபெருமான் வரமளித்து மறைந்தார். சிறிது நாளில் ஒரு நல்ல சுபமுகூர்த்த தினத்தில் மருத்துவதி அழகான பிள்ளையைப் பெற்றெடுத்தார். தேவர்கள் பூமாரி பொழிந்து, தேவதுந்துபி இசைத்து வரவேற்றனர். நான்முகன் அக்குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டார்.
மார்க்கண்டேயன் காப்பாற்றப்பட்ட தெய்வீக தருணம்
மார்க்கண்டேயன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாகவும் வளரத் தொடங்கினான். வளர வளர பெற்றோர் ஆனந்தப்படாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு அதற்குக் காரணம் என்னவெனக் கேட்டான்.பெற்றோர்கள் அவனது வரத்தைப் பற்றிக் கூறினர். மார்க்கண்டேயன் பெற்றோரை சமாதானப்படுத்தி தாம் பூரண ஆயுளுடன் இருக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து வெற்றியுடன் திரும்புவதாகக் கூறி காசி சென்றார்.
அங்கு மணிகர்ணிகையருகே ஒரு சிவலிங்கத்தைப் பூஜித்து வந்தார். சிவபெருமான் அவரது பூஜைக்கு மகிழ்ந்து எமபயம் நீங்குக என்று வரமளித்தார். பின்னர் ஊர் திரும்பினார். ஆயுள் முடியும் சமயத்தில் எமதூதன் வந்தபோது பூஜை பலனால் அருகே நெருங்க முடியவில்லை. பின்னர் சித்ரகுப்தனும், எமனது மந்திரியான காலனையும் அனுப்பினான்.
முடிவாக எமனே நேரில் வர, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை தழுவிக் கொண்டான். உடன் சிவபெருமான் தோன்றி எமனை இடக்காலால் எட்டி உதைத்தார்.இதனால் எமன் இறந்தான். பூமியில் மரணம் நிகழாததால் பூமியின் எடை அதிகரித்தது. பாரம் தாங்காத பூமாதேவி சிவபெருமானை வேண்டினார்.
உடன் எமன் உயிர்த்தெழுந்தான். மிருகண்டு மகனான மார்க்கண்டேயனுக்கு நித்ய சிரஞ்சீவியார் என்றும் என்றும் பதினாறு வயதாக இருப்பார் என்றும் வரமளித்தார்.மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை உதைத்த திருக்கோலமே காலந்தக மூர்த்தி ஆகும்.
காலந்தக மூர்த்தி தரிசன மகிமை
காலந்தக மூர்த்தியை தரிசிப்பது அகால மரண பயம் நீங்கவும், ஆயுள் தோஷம், எமபயம், கர்ம வினை தடைகள் நீங்கவும் மிகுந்த பலன் அளிப்பதாக நம்பப்படுகிறது.இவரை வணங்க வேண்டிய தலம் திருக்கடையூர் ஆகும். இத்தலம் மாயவரம் அருகே அமைந்துள்ளது.
திரிகாலா தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான பரிகார ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திரிகாலா - கர்மவினைத் தீர்வுகள்
Comments
Add a Comment