சுகாசன நிலையில் சிவாகமங்களைப் பற்றி உறைத்த சுகாசன மூர்த்தி
சிவனை நினைத்து, சிவமயமாய், சிவனே என்று இருக்கச் சித்தப்படும் அனைவருக்கும், சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசிகளை வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன். தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல.
சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என ஓலைச்சுவடிகள் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இப்பிரபஞ்சத்தைக் காத்து அருள்புரிகின்றார். சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், சுகாசன மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இச் சுகாசன மூர்த்தி வடிவமானது உமையன்னை சந்தேகம் தீர்த்த வடிவமாகும்.
சுகாசன மூர்த்தி வடிவம்
பெயர் : சுகாசன மூர்த்தி
வாகனம் : ஆயிரங்கால் மண்டபம்
மூர்த்த வகை : மகேசுவர மூர்த்தம்
விளக்கம் மற்றும் அவதாரக் காரணம்
வெள்ளிமலையின் மீது கண்களைக் கூசச்செய்யும் ஒளி கொண்ட நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அதில் ஜோதிமயமான சிவபெருமான் நடுவே நாயகனாக வீற்றிருக்க, அவரைச் சுற்றிலும் மும்மூர்த்திகளும் தேவகணங்களும், தேவலோக வாழ் அனைத்துமே அங்கே கூடியிருக்கின்றன.
சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைக் கேட்க, அவரும் வேண்டிய வரங்களைத் தந்தபடியே இருக்கிறார். நேரம் கடந்தது. அனைவரும் தங்களது பணிக்கும், இருப்பிடத்திற்கும் திரும்பிவிட்டனர். சற்றைக்கெல்லாம் உமாதேவியார் அங்கே பிரசன்னமாகி, இறைவனின் தாள் பணிந்து, “எம்பெருமானே, சிவாகமங்களின் உண்மைகளையும் விளக்கங்களையும் எனக்கு புரியும் படி தாங்கள் கூற வேண்டும்” என்று வேண்டுகிறார்.
உடன் சிவபெருமான் சிவாகமங்களின் உண்மைகளையும் விளக்கங்களையும், ஐவகை பந்த பாசங்களின் நிலையையும், அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும், சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கின்றார். அச்சமயம் அவர் சுகாசன நிலையில் அமர்ந்தபடி உறைக்கிறார். அருகே உமாதேவியார் நின்றுகொண்டுள்ளார்.
சுகாசன நிலையில் சிவாகமங்களைப் பற்றி உறைத்த காரணத்தால் இவரை நாம் சுகாசன மூர்த்தி என அழைக்கின்றோம். இவரது கரங்களில் மான் மற்றும் மழு உள்ளன. இடக்காலை மடக்கிவைத்து, வலக்காலைத் தொங்கவிட்டு சிவபெருமான் அமர்ந்திருக்கிறார்.
சுகாசனம் என்பது சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முக்தம், மயூரம், சுகம் என்ற ஒன்பது வகையான ஆசனங்களில் ஒன்றாகும். இந்த சுகாசன வடிவத்தில் மூன்று வகைகள் உள்ளன.
உமாசகித சுகாசனர்.
உமா மகேசுவர சுகாசனர்.
சோமாஸ்கந்த சுகாசனர்.
தரிசன இடங்கள்
இத்தகைய சுகாசன மூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் சீர்காழி ஆகும். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் பிரம்மபூரீஸ்வரர், சட்டைநாதர், தோணியப்பர் என்ற மூன்று திருநாமங்களை உடையவர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி ஆகும்.
சேவை தொடர்பு
எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான பரிகார ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்
Comments
Add a Comment