வராக சம்ஹார மூர்த்தி – சிவபெருமானின் வேட வடிவம்
சிவனை நினைத்து, சிவமயமாய், சிவனே என்று இருக்கச் சித்தப்படும் அனைவருக்கும், சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசிகளை வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் மற்றும் பல நாடி ஓலைக் குறிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இப்பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், வராகசம்ஹாரமூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ்வராகசம்ஹாரமூர்த்தி வடிவமானது வராக வடிவ திருமாலை அடக்கிய வடிவமாகும்.
வராக சம்ஹார மூர்த்தி
பெயர் : வராக சம்ஹார மூர்த்தி
வாகனம் : நந்தி தேவர்
மூர்த்த வகை : மகேசுவர மூர்த்தம்
விளக்கம் மற்றும் அவதாரக் காரணம்
இரணியாக்கன் எனும் அசுரன் பிரமனை நோக்கி தவமிருந்தான். அவன் தவத்திற்கு மெச்சிய பிரமன், அவன் கேட்ட அனைத்து வரங்களையும் கொடுத்தார். இதனால் அந்த அசுரன் உலகை பாய்போல் சுருட்டி கடலில் சென்று மறைந்தான். தேவர்கள் இதனால் திகைத்தனர்.
பின்னர் தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால், அனைவரது ஆசிகளுடன் கருட வாகனத்தில் சென்று வைகுண்டம் தாண்டியதும் வராக உருவம் கொண்டார். அது மலையை விட உயரமாகவும், ஒவ்வொரு காலுக்கிடையே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் இடைவெளியுடன் இருந்தது. அதன் வால் அசைவும் தொட்டு, மூச்சுக்காற்றின் வெப்பத்தினால் உலகமே குலுங்கியது.
இதுபோல் பயங்கரமான உருவம் கொண்ட திருமால் கடலையே பிரட்டி அசுரனைக் கண்டுபிடித்து, தன் கொம்பினால் கொன்று உலகை மீட்டு ஆதிசேஷனிடம் ஒப்படைத்தார். பின் அவராகம் பெரும் கர்வமுடன் எதிர்வந்த அனைத்து உயிர்களையும் கொன்று நொறுக்கியது.
இதன் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகவே பயந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்த அவர் வேட வடிவம் கொண்டு வராகத்தை தன் சூலாயுதத்தால் கொன்று, அதன் ஒரு கொம்பை தன்மேனியில் ஆபரணமாக்கினார். இதனால் வராகத்தின் அகந்தை ஒழிந்தது. சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டியது. இதனால் மற்றொரு கொம்பு பிழைத்தது.
பின்னர் சிவனருளால் வராக உருவம் நீங்கி பழைய உருவம் அடைந்ததும், அனைவருக்கும் வராக புராணம் கூறி வைகுண்டம் சென்றார். திருமால், தேவர்கள் துயர்துடைக்க வராகத்தை அழிக்க சிவபெருமான் கொண்ட கோலமே வராக சம்ஹார மூர்த்தி ஆகும்.
தரிசன இடங்கள்
இவரை காசியிலும், தமிழகத்திலும் உள்ள பல மலைக் கோயிலிலும் காணலாம்.
எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான பரிகார ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்
Comments
Add a Comment