அசுரரை அழித்து உலகை காத்த வீரபத்திரர் உக்கிர அவதாரம்
சிவனை நினைத்து, சிவமயமாய், "சிவனே" என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும், சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும், நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு, உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்திநான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புகள் மற்றும் பல புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவன் இப் பிரபஞ்சத்தை காத்து அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், வீரபத்ர மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ்வடிவமானது வீரபத்திரராக வெளிப்பட்ட உக்கிரத் திருவடிவமாகும்.
அசுரர்–தேவர் போர்
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்பொழுதுமே இடைவிடாத போர் நடைபெற்று வந்தது. இந்திரனின் தலைமையில் தேவர்கள் அசுரர்களை போரில் தோற்கடித்து, அவர்களின் உடலுறுப்புகளையும் துண்டித்தனர். இதனால் அசுரர்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகினர்.
தங்கள் தோல்வியால் கலங்கிய அசுரர்கள், தங்கள் குருவான சுக்கிரனை அணுகி ஆலோசனை கேட்டனர். சுக்கிரன், அசுரர்களில் வீரமார்த்தண்டன் என்பவனை அழைத்து, நான்முகனை நினைத்து கடுந்தவம் செய்ய உத்தரவிட்டார்.
அதன்படியே வீரமார்த்தண்டன் கடுமையான தவம் புரிந்தான். அவன் தவத்தின் கடுமை தாங்கமுடியாமல், நான்முகன் காட்சி கொடுத்து, எலும்பும் தோலுமாகிய அவனை பழைய நிலைக்கு மாற்றி, "என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்டார்.
வீரபத்திர மூர்த்தி அவதாரம்
வீரமார்த்தண்டன், மூன்று உலகங்களிலும் தன்னை வெல்ல யாருமில்லாமல் அரசாள வேண்டும் என்ற வரத்தை பெற்றான். அந்த வரத்தின் அகந்தையால், தேவர்களையும், தேவபெண்டிர்களையும் கொடுமைப்படுத்தினான்.தேவர்களின் துயரம் உச்சக்கட்டத்தை அடையவே, பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான், வீரபத்திரரை அழைத்தார்.
சிவபெருமானின் ஆணையாலும், தேவர்களின் துயரைத் துடைக்கும் பொருட்டும், வீரபத்திரர் வீரமார்த்தண்டனை எதிர்க்கப் புறப்பட்டார். முதலில் அவனது படைபலங்களை அழித்தார். பின்னர் வீரமார்த்தண்டனை நேரடிப் போருக்கு அழைத்தார். அது மிகக் கடுமையான போராக அமைந்தது. வீரமார்த்தண்டன் பலவிதமான மாயைகளைச் செய்து தப்பிக்க முயன்றாலும், இறுதியில் வீரபத்திரர் அவனை வதம் செய்தார்.
அதன் பின், தேவர்களின் துயரை நீக்கி, இந்திரன், நான்முகன் உள்ளிட்ட அனைவரையும் அவரவர் பதவிகளில் மீண்டும் அமர்த்தி, உலக உயிர்கள் அனைத்திற்கும் சுகவாழ்வு அருளினார். வீரமார்த்தண்டனை அழித்து, தேவர்களின் துயரைப் போக்க சிவபெருமான் எடுத்த திருவடிவமே வீரபத்திர மூர்த்தி ஆகும்.
இவரை தரிசிக்கும் முறை
வீரபத்திர மூர்த்தியை தரிசிக்க வேண்டிய தலம், காரைக்கால் அருகே அமைந்துள்ள பெருந்துறை ஆகும். செவ்வாய் தோஷ நிவர்த்திக்கும், வாழ்க்கை முறைக்கு வேண்டிய மனஉறுதியை அளிக்கவும் இவர் சிறப்பாக அருள்புரிகிறார்.
எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக பரிகார வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்
Comments
Add a Comment