சிவபெருமானின் 64 அவதாரங்கள் - சந்திரசேகர மூர்த்தி

சந்திரனைத் தன் சடையில் தரித்த சிவபெருமான்

சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புக்கள் மற்றும் புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவன் இப்பிரபஞ்சத்திற்கு காத்து அருள்புரிகின்றார்.

சந்திரசேகர மூர்த்தி வடிவம்

சிவனின் 64 தாண்டவ அவதாரங்களில் சந்திரசேகர மூர்த்தி வடிவமும் ஒன்றாகும்.

பெயர்: சந்திரசேகர மூர்த்தி

வாகனம்: நந்தி தேவர்

மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்

சிவ அவதார காரணி

நான்முகனின் மகன் தட்சன். அவனுக்கு நட்சத்திரங்களே இருபத்தியேழு பெண்களாக பிறந்தனர். அவர்கள் அனைவரையும் சந்திரனுக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்குப் பிறகு சில காலம் சந்திரன் அனைத்து மனைவியரிடமும் சமமான அன்புடன் நடந்துகொண்டார்.

நாட்கள் செல்லச் செல்ல, அவரது அன்பு கார்த்திகை மற்றும் ரோகிணி மீது மட்டுமே அதிகரித்தது. இதனால் மற்ற பெண்கள் மனம் சகியாது தந்தையாகிய தட்சனிடம் முறையிட்டனர். தட்சனும் மருமகனை அழைத்து தன் அனைத்து மகள்களையும் சமமாக நடத்தி, அவர்களிடம் அன்புடன் இருக்குமாறு புத்திமதி கூறினார்.

ஆனால் சிறிது காலத்திற்குப் பின்னரும் சந்திரனின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மீண்டும் பெண்கள் தட்சனிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தாங்கமுடியாமல் தட்சன் சந்திரனை நோக்கி, "நாளுக்கு ஒரு கலையாக தேய்ந்து இறப்பாய்" என்று சாபம் அளித்தார்.

அந்த சாபத்தின் வீரியத்தால் சந்திரன் நாளொரு கலையாக தேய்ந்து, இறுதியில் ஒரு கலை மட்டுமே மீதமிருந்த நிலையில், இந்திரனின் ஆலோசனையின்படி நான்முகனைச் சந்தித்து தன் துயரை எடுத்துரைத்தான்.

நான்முகன், "தந்தை மகன் விஷயத்திலும், மகன் தந்தை விஷயத்திலும் தலையிடுவதில்லை; இந்த துயரை தீர்க்க சிவபெருமானால் மட்டுமே இயலும்" என்று கூறி, சிவனைச் சரணடையுமாறு அறிவுறுத்தினார்.

அதன்படி சந்திரன் சிவபெருமானிடம் சரணடைந்தான். சிவபெருமானும் சந்திரனின் ஒரு கலையை எடுத்து தன் சடையில் சூடி, "இனி உன் ஒரு கலைக்கு அழிவில்லை. தட்சனின் சாபத்தினால் தினமொரு கலையாக தேய்ந்தும், என்னிடம் இருப்பதால் தினமொரு கலையாக வளர்ந்தும் காணப்படுவாய்" என்று அருளாசி வழங்கினார்.

இவ்வாறு சந்திரனைத் தன் சடையில் தரித்ததால் சிவபெருமான் "சந்திரசேகரன்" என அழைக்கப்பட்டார்.

தரிசிக்கும் முறை

சந்திரசேகர மூர்த்தியை தரிசிக்க திருவாரூர் (புகலூர்) செல்ல வேண்டும். இத்தலம் நாகப்பட்டிணம் அருகே அமைந்துள்ளது. இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம் கோணபிரான் மற்றும் அக்னிபுரீஸ்வரர் ஆகும். இறைவி கருந்தாழ்குழலி.

சேவை தொடர்பு

எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக பரிகார வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்

Post Tags

Comments

Add a Comment

Categories