முண்டாசுரன் வதம் செய்த வடுக மூர்த்தி
சிவனை நினைத்து, சிவமயமாய், "சிவனே" என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும், சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும், நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு, உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்திநான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புகள் மற்றும் பல புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவன் இப் பிரபஞ்சத்தை காத்து அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், வடுக மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ்வடிவமானது முண்டாசுரனை வதம் செய்த உக்கிரத் திருவடிவமாகும்.
முண்டாசுரன் அகந்தை
சிவார்ச்சனையால் பலனடைந்த துந்துபி என்போனின் மகனான முண்டாசுரன், இளமையிலேயே சிவபெருமானை நோக்கி ஊண், உறக்கம் இன்றி, வெயில், மழை, குளிர் என எதையும் பொருட்படுத்தாமல், ஐம்புலனையும் அடக்கி சிவபெருமானையே மனதில் கொண்டு கடுந்தவம் செய்தான்.
அவனது தவத்தில் மெச்சிய சிவபெருமான், நான்முகன் மற்றும் திருமால் இருபுறம் வர, தும்புருநாதர் இசைபாட, பார்வதியுடன் இடப வாகனத்தில் எழுந்தருளினார். முண்டாசுரன் மகிழ்ந்து, யாராலும் அழிக்கவொண்ணாத வரம் கேட்டான். கேட்டபடியே வரம் வழங்கி சிவபெருமான் மறைந்தார்.
அந்த வரத்தின் அகந்தையால், தேவர்கள், சந்திரன், சூரியன், குபேரன் என அனைவரையும் துன்புறுத்தினான். குபேரனின் செல்வங்களையும் அபகரித்தான். அவனுடன் போர்புரிந்த தேவர்களெல்லாம் தோல்வியுற்றனர். இறுதியில் நான்முகனைச் சரணடைந்தனர்.
வடுக மூர்த்தி அவதாரம்
நான்முகன் முண்டாசுரனை அழிக்கப் புறப்பட்டு கடும் போர் புரிந்தார். ஆனால் அவனை வெல்ல முடியாத சூழலில், சிவபெருமானை வணங்கி, “ஐயனே! எனது துயரை நீக்கி, அசுரனை அழிக்க அருள் புரிய வேண்டும்” என மனமுருக வேண்டினார்.
அந்த விண்ணப்பத்தைக் கேட்ட சிவபெருமான், தம்மிடமிருந்து தோற்றுவிக்கப்பட்ட வடுக மூர்த்தியை முண்டாசுரனை வதம் செய்ய அனுப்பினார். வடுக மூர்த்தி அவ்விடம் சென்று, ஒரு நொடியில் முண்டாசுரனை வதம் செய்தார்.
இதைக் கண்ட நான்முகன் பெருமகிழ்ச்சி அடைந்தார். தேவர்கள் பூமாரி பொழிந்து வடுக மூர்த்தியை வாழ்த்தினர். பின்னர் வடுக மூர்த்தி அனைவரையும் விடுவித்து, அவரவர் இடங்களில் அமர்த்தி, சிவபெருமானிடம் சென்று ஐக்கியமானார்.
நான்முகனின் வேண்டுகோளுக்கிணங்க, முண்டாசுரனை அழிக்க சிவபெருமான் எடுத்த திருவடிவமே வடுக மூர்த்தி ஆகும்.
இவரை தரிசிக்கும் முறை
வடுக மூர்த்தியை தரிசிக்க வேண்டிய தலம், பாண்டிக்கு அருகேயுள்ள வடுகூர் ஆகும். இங்குள்ள இறைவன் பெயர் வடுகநாதன் (வடுகூர்நாதன்), இறைவி பெயர் திரிபுரசுந்தரி.
இத்தலம் திருவாண்டார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. வாமதேவ தீர்த்தமும், வன்னிமரம் தலமரமாகவும் உள்ளது. கார்த்திகை அஷ்டமி தினத்தில் இங்கு பைரவர்க்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.
எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக பரிகார வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்
Comments
Add a Comment