மந்திரங்கள் செய்யும் அற்புதங்கள்
சிவாகமங்களில் அருளப்பட்டுள்ள மந்திர சக்தி நிறைந்த பிரார்த்தனை பதிகங்கள் சிவபெருமானின் அன்பிற்குரிய அடியார்களான சைவ திருநால்வர்களால் பாடப்பட்டவை. அவை சிவபெருமானின் திருகரங்களாலேயே எழுதப்பட்டவை என்ற பெருமையும் அவற்றுக்கு உண்டு. அந்த பிரார்த்தனை பதிகங்கள் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்று நிலைகளிலும் இறையருளை பெறச்செய்து இகபர நல்வாழ்வை அளிக்கும் தூய ஆன்மீக வாழ்க்கைக்கு உரிய கவசங்களாக இன்று வரை விளங்குகின்றன.
அப்படிப்பட்ட அந்த பிரார்த்தனை பதிகங்களை அன்றாடம் நாம் படிப்பதாலும், கேட்பதாலும் நமது பயம், கோபம், பாவம், துன்பம், துயரம் ஆகிய அனைத்துவித எதிர்மறை சக்திகளும் விலகி தூய்மையான இறையருளே நம்முடைய வாழ்வை வழிநடத்தும் என்பது ஐதீகமாகும். அந்த மந்திர சக்தி மிக்க பதிகங்கள் ஒருவருடைய மனதில் அமைதியை மட்டும் எழுப்புவதோடு நின்றுவிடாமல் ஆன்மாவை கரை சேர்க்கும் உயர்ந்த ஆன்மீக லட்சியங்களை அடைவதற்கும் துணையாக இருக்கின்றன.
இன்றைய நவீன அறிவியல் அறிஞர்கள் குறிப்பிட்ட சப்த அலைவரிசையில் மந்திரங்களை உச்சாடனம் செய்யும் பொழுது அது மனிதர்களுடைய நரம்பு இயக்கங்களை அமைதிப்படுத்துவதாக குறிப்பிடுகிறார்கள். மந்திரம் என்பது சொல்பவனை காப்பது என்ற அர்த்தம் கொண்டதாகும். அப்படிப்பட்ட ஒரு மந்திர சொல்லை தொடர்ந்து திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்து வருவதன் மூலம் உரு ஏற உரு ஏற திரு ஏறும் என்ற வாக்கின்படி அந்த மந்திரம் தெய்வீக ஆற்றல் பெற்று சொல்பவரது விருப்பங்களை பூர்த்தி செய்யும் என்பது தெய்வீக உண்மையாகும்.
மந்திர உச்சாடனம் மூலமாக ஒருவரது ஆழ்மனதின் ஆற்றல்கள் பூரணமாக வெளிப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அந்த மந்திரத்தின் புனிதமான ஆன்மீக சக்தி அவரது வாழ்க்கையின் துன்பங்களை அகற்றுவதுடன், நல்ல மாற்றங்களையும் புற வாழ்வில் உருவாக்குகிறது. மந்திர உச்சாடனம் என்பது உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டு நிலைகளிலும் நேர்மறை அதிர்வுகளை உருவாக்கி ஆத்ம சக்தியை ஒருவரைச் சுற்றிலும் பரவ வைக்கிறது. அதன் மூலமாக ஒருவர் தனக்கும் தன்னைச் சார்ந்த மற்றவர்களுக்கும் நன்மைகளை செய்து இந்த உலகத்தில் வாழ்வாங்கு வாழ முடியும்.
திரிகாலா பெருமுயற்சி செய்து மந்திர சக்தி வாய்ந்த பிரார்த்தனை பதிகங்களை ஆன்மிக அருளாளர்களைக் கொண்டு சரியான உச்சரிப்புடன் பாட வைத்து பதிவு செய்திருக்கிறது.
அந்த பிரார்த்தனை பதிகங்களை ஒருவர் ஒருமித்த சிந்தனையுடன் கேட்டு வந்தாலே போதுமானது. மேலும், நல்ல பலன்களை பெற அந்த மந்திர பதிகங்களை பலமுறை கேட்டு அதை கச்சிதமான உச்சரிப்புடன், சரியான காலப்பிரமாணத்துடன், உச்சாடனம் செய்து பழகி நீங்களும் அதை பலமுறை சரியாக உச்சரிக்கும்போது ஏற்படும் பலன்களை பற்றி வார்த்தைகளில் விவரிக்க இயலாது.
அன்றாடம் தொடர்ந்து பிரார்த்தனை பதிகங்களை உச்சாடனம் செய்வதாலும், கேட்பதாலும் அகம், புறம் ஆகிய இரு நிலைகளிலும், உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்று வகைகளிலும் ஒருவர் அமைதியை உணர முடியும்.